US President Donald Trump announces Tariff on Canada: வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீது 35% வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசுரீதியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் அதிகரிக்கும் வகையிலான இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஃபெண்டானில் முக்கியக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரூத் சோஷியலில் சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம், வரி விதிப்பு உயர்வுக்கான காரணங்களை டிரம்ப் அடிக்கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக அமெரிக்காவில் நுழையும் ஃபெண்டானில் வேதிப்பொருள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகிய விவகாரங்களில் கனடா ஒத்துழைக்கத் தவறியதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான பிற நாடுகள் மீது 15% முதல் 20% வரையிலான வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தன் எக்ஸ் பதிவில் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது,
`அமெரிக்காவுடன் தற்போது நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை முழுவதிலும், எங்கள் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்துள்ளோம். ஆகஸ்ட் 1-ம் தேதிக்கான திருத்தப்பட்ட காலக்கெடுவை நோக்கி நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்’ என்றார்.
மேலும், `வட அமெரிக்காவில் ஃபெண்டானில் நுழைவதைத் தடுக்க பல முக்கிய நடவடிக்கைகளை கனடா மேற்கொண்டுள்ளது. எங்கள் இரு நாடுகளிலும் உள்ள உயிர்களைக் காக்கவும், சமூகங்களைப் பாதுகாக்கவும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்றார்.
மருத்துவ சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஃபெண்டானில் என்கிற வஸ்து, போதைப் பொருளாகவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. கனடாவுடனான எல்லைப்பகுதி வழியாக தங்கள் நாட்டிற்குள் ஃபெண்டானில் அதிகளவில் கடத்தப்படுவதாக அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தது வருகிறது.