உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று!

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்காவின் லாஸ் வேகாசில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜீன் பெர்ரி, `அதிபர் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு லேசான அறிகுறிகள் தென்படுவதால், அவர் டெலாவேரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார். அங்கிருந்தபடியே தன் பணிகளை அவர் மேற்கொள்வார்’ என்று தெரிவித்தார்.

வயது மூப்பு காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜோ பைடனை, தேர்தலிலிருந்து விலகக்கோரி அவரது சொந்த ஜனநாயகக் கட்சிக்குள் கலகக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பைடன், `எனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்கிறேன்’ என்றார்.

டெலாவேரில் உள்ள தன் கடற்கரை இல்லத்தில் அடுத்த ஒரு வாரம் பைடன் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பால் எத்தனை நாட்கள் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருப்பார் என்பது குறித்த தெளிவான தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை.

அமெரிக்காவின் புதிய அதிபரைத் தேர்தெடுக்க நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறதி. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தங்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்பை அறிவித்துள்ளது குடியரசு கட்சி.