உலகம்

மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஜோ பைடன் வழங்கிய இந்த பொது மன்னிப்பு உத்தரவை, டொனால்ட் டிரம்பால் ரத்து செய்யமுடியாது.

ராம் அப்பண்ணசாமி

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தன் மகன் ஹண்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 54 வயதான மகன் ஹண்டர் பைடன் உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியதற்காக கடந்த ஜூனில் டெலாவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான மற்றொரு குற்ற வழக்கில், 2016 முதல் 2019 வரை வரி ஏய்ப்பு செய்த குற்றத்தை ஹண்டர் பைடன் ஒப்புக்கொண்டார்.

இந்த இரு குற்ற வழக்குகளிலும் ஹண்டர் பைடனுக்கான தண்டனை விவரங்கள் அடுத்த சில நாட்களில் வழங்கப்பட உள்ளன. துப்பாக்கி வழக்கில் ஹண்டர் பைடன் மீது குற்றச்சாட்டு நிரூபணம் ஆன போதிலும், அதிபருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகனுக்குச் சலுகை காட்டமாட்டேன் என அறிவித்திருந்தார் ஜோ பைடன்.

மேலும், பிற அமெரிக்க குடிமகன்களை போல ஹண்டர் பைடனும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என கடந்த மாதம் அறிவித்திருந்தார் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஜீன் பெர்ரி.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், `1 ஜனவரி 2014 முதல் 1 டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஹண்டர் பைடன் மேற்கொண்ட அல்லது பங்கு வகித்த அனைத்து குற்றங்களில் இருந்தும் அமெரிக்க அதிபரால் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹண்டர் பைடன் மீதான இரு குற்ற வழக்குகளின் தண்டனை விவகாரங்கள் வெளியாகும் முன்பே, அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் ஜோ பைடன். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ல் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பால் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோ பைடன் வழங்கிய இந்த பொது மன்னிப்பு உத்தரவை ரத்து செய்யமுடியாது.