உலகம்

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 74 பேர் பலி: ஹௌத்தி அறிவிப்பு!

அதிபராகக் கடந்த ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் ஹௌத்திகள் மீதான தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

செங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஏமன் நாட்டின் ராஸ் இசா எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 74 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹௌத்திகளின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரேபியக் கடலை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில், அரசுக்கு எதிராக தொண்ணூறுகளில் ஹௌத்தி குழு கிளர்ச்சியில் ஈடுபட்டது. இன்றைய நிலவரப்படி ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட அந்நாட்டின் பெரும்பாலான பகுதியில் ஹௌத்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹௌத்திக்களுக்கான ஆயுத மற்றும் பிற உதவிகளை ஈரான் அளித்து வருகிறது.

கடந்தாண்டு முதல் ஹௌத்திகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதலில் அமெரிக்க ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்றது முதலே ஹௌத்திகள் மீதான தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 7 அக்டோபர் 2023-ல் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது ஹௌத்தி குழு தாக்கத் தொடங்கியது. கப்பல்கள் மீதான தாக்குதலை ஹௌத்திகள் நிறுத்தும் வரை தங்களின் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், ஏமனின் ராஸ் இசா எண்ணெய் துறைமுகம் மீது நேற்று அமெரிக்க நடத்திய தாக்குதலில் 74 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், 171 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பாஹி தகவல் தெரிவித்துள்ளார்.

ஹௌத்தி குழுவினருக்குக் கச்சா எண்ணெய் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தகவலளித்துள்ளது. இந்த துறைமுகத்தைக் குறிவைத்து ஏற்கனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்பு தாக்குதல்களை நடத்தியுள்ளன.