பிரபல இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி விவகாரத்தில், ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க எம்.பி. லான்ஸ் கூடென்.
கடந்தாண்டு நவம்பரில், தொழிலதிபர் கௌதம் அதானி, அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 நபர்கள் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான வழக்குகளை நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில், அமெரிக்க நீதித்துறை பதிவு செய்ததாக செய்தி வெளியானது
2020-2024 காலகட்டத்தில், அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் வாங்கும் வகையிலான விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிஷா மாநில அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ. 25,000 கோடி முதலீடு பெற்றதாகவும் அந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டனர் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் மெர்ரிக் பி கார்லேண்டிற்குக் கடிதம் எழுதியுள்ளார், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரான லான்ஸ் கூடென். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
`சில குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வழக்குகளில் மட்டும் அமெரிக்க அரசு ஆர்வம் காட்டுகிறது. இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் வலுவான கூட்டாளிகளாக இருக்கும் நிலையில் இது போன்ற வழக்குகள் இரு நாட்டு உறவுகளை சீர்குலைக்கும்.
அமெரிக்க நலன்களுக்கு ஆதாயம் தராத, நம் அதிகார வரம்பிற்குள் வராத வழக்குகளை விட்டுவிட்டு உள்நாட்டிலுள்ள குற்றவாளிகளை தண்டிப்பதில் நீதித்துறை கவனம் செலுத்தவேண்டும். அமெரிக்க அதிபர் பைடனின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் அடுத்து பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும்’ என்றார்.