ANI
உலகம்

சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 104% வரி விதிப்பு!

வளர்ச்சிக்கான சீன மக்களின் சட்டபூர்வமான உரிமையை மறுக்க முடியாது.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த 34% பதிலடி வரியை திரும்பப் பெற விதிக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிவுக்கு வந்ததை அடுத்து, சீன இறக்குமதிகள் மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சுமார் 25 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான புதிய வரிகளை (பரஸ்பர வரி நடைமுறை) கடந்த ஏப்ரல் 2 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதன்படி சீனப் பொருட்கள் மீது கூடுதலாக 34% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்க இறக்குமதிகள் மீது 34% வரியை சீனா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் 34% வரிவிதிப்பை சீன அரசு திரும்பப்பெறவில்லை என்றால், கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா விடுத்த 24 மணி நேர கெடு முடிவுக்கு வந்த நிலையில், சீனா மீது ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரிகளுடன் கூடுதலாக 50% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம், சீனப் பொருட்கள் மீது ஒட்டுமொத்தமாக 104% இறக்குமதி வரி அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன அரசு, அதன் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது,

`வளர்ச்சிக்கான சீன மக்களின் சட்டபூர்வமான உரிமையை மறுக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள் மிகவும் அவசியமானவை’ என்றார்.