போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடைப்பிடித்து மத்திய கிழக்கில் இரு நாடுகள் தீர்வுக்கு உறுதியளிக்காவிட்டால், காஸாவில் நிலவும் `சகிக்க முடியாத’ சூழலை கருத்தில்கொண்டு, வரும் செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரிட்டம் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக உள்நாட்டில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளான பிறகு, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான திட்டத்திற்கு கெய்ர் ஸ்டார்மரின் தலைமையிலான பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதில் பிரான்ஸை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
ஸ்காட்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கோடை விடுமுறையில் இருந்த தனது அமைச்சரவை சகாக்களை அழைத்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் நடத்தினார். தாம் விரும்பாத முடிவாக இருந்தாலும்கூட இந்த பிரச்னையில் பிரிட்டன் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் தனக்குக் `கவலை இல்லை’ என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
தொடர் போரால் பாலஸ்தீனத்தின் காஸாவில் நிலவும் பேரழிவு சூழலாலும், இரு நாடுகள் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாலும், இந்த விவகாரத்தில் இறுதி நடவடிக்கை எடுக்க இதுவே சரியான நேரம் என்று பிரதமர் ஸ்டார்மர் தனது அமைச்சரவை சகாக்களிடம் கூறியுள்ளார்.
`இறுதியில், இந்த மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான்’ என்று செய்தியாளர்களிடம் கூறிய பிரதமர், `ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான இஸ்ரேலுடன், ஒரு சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசு நமது இலக்காகும், ஆனால் தற்போது அந்த இலக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது’ என்றார்.
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கடந்த வாரம் அறிவித்தார்.