ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (ஜூலை 20) ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) இது 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று அறிவித்தன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கம்சட்கா தீபகற்பத்தை ஒட்டியுள்ள கடல்பகுதியில் ஒட்டுமொத்தமாக ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, 6.6, 6.7, 6.7, 7 மற்றும் 7.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவான ஐந்து நிலநடுக்கங்களுமே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும், காலை 08.49 மணிக்கு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்தே பசிபிக் பெருங்கடலில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு அருகில் அமைந்திருந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. (186 மைல்) சுற்றளவுக்குள் `ஆபத்தான சுனாமி அலைகளுக்கு சாத்தியமுள்ளது’ என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்தது.
கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க நிலத் தட்டுகள் சந்திக்கும் இடம் என்பதால், இது நிலநடுக்க மண்டலமாக உள்ளது. கடந்த நவம்பர் 4, 1952 அன்று, கம்சட்காவில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.