சேதமடைந்த கட்டடம் https://x.com/SaffronSunanda
உலகம்

ரஷ்யாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஜப்பான், அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை! | Tsunami

ரஷ்யாவில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரகால நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30) அதிகாலை கடலுக்கடியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், 4 மீட்டர் (13 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகளைத் தூண்டியது. இதனால் அப்பகுதியிலும், ஜப்பானின் கிழக்கு கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளிலும் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஒட்டி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல்வேறு தீவு நாடுகள் என பசிபிக் முழுவதிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் குரில் தீவுகளையும், ஜப்பானின் மிகப்பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவின் கடலோரப் பகுதிகளையும், சுனாமி தாக்கியுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதனால், ரஷ்யாவில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரகால நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 19.3 கி.மீ. (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி அவாச்சா விரிகுடாவில் சுமார் 1.65 லட்சம் மக்கள்தொகையைக்கொண்ட கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் சுமார் 125 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் அமைந்திருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் ரிக்டர் அளவுகோலின்படி 8.0 ஆக அறிவிக்கப்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு, பின்னர் 8.8 ஆக மேம்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பசிபிக் முழுக்க சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்திற்குப் பிறகு, கம்சட்கா தீபகற்பத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் பதிவானதாக ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகளுக்கான பிராந்திய அமைச்சர் தகவல் தெரிவித்தார். `அனைவரும் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தூரமாகச் செல்லவேண்டும்’ என்று அமைச்சர் லெபடேவ் கூறினார்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு, மூன்று மணி நேரத்திற்குள் `அபாயகரமான சுனாமி அலைகள்" தாக்கக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ள பசிபிக் கடற்கரை மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகளின் சில பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு மேல் அலைகள் எழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.