REUTERS
உலகம்

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று அதிபராகும் முதல் அமெரிக்கர்: டிரம்ப் மோசமான சாதனை!

கடந்த மே 2023-ல் டிரம்புக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

ராம் அப்பண்ணசாமி

நடிகைக்கு வழங்கிய பணத்தை சட்ட கட்டணமாக வழங்கியதாக முறைகேடாக ஆவணம் தயாரித்த வழக்கில் தண்டனை பெற இருப்பதால், நீதிமன்றத்தால் தண்டனை பெற்று அதிபராகும் முதல் அமெரிக்கர் என்கிற மோசமான சாதனையை படைக்கவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், அந்நாட்டு நீலப்பட நடிகை ஒருவருடன் தனக்கு இருந்த தொடர்பை வெளியே கூறாமல் இருப்பதற்காக அவருக்கு சுமார் 1,30,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார் டொனால்ட் டிரம்ப். இந்தப் பணப் பரிவர்த்தனையை சட்ட கட்டணம் என்ற முறையில் மேற்கொண்டதாக முறைகேடான வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தை முன்வைத்து நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக், டிரம்புக்கு எதிராக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே 2023-ல் டிரம்புக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டிரப்பிற்கான தண்டனை விவரங்கள் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் சிறை தண்டனை இல்லாமல், டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அபராதம் மட்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப், வரும் ஜனவரி 20-ல் 47-வது அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

சிறை தண்டனை இல்லை என்றாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முதல் அதிபர் என்கிற மோசமான சாதனையைப் படைக்கவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.