அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப்படம்) 
உலகம்

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்: டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை | Donald Trump |

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...

கிழக்கு நியூஸ்

வெனிசுவேலாவின் செயல் அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தென்னமெரிக்க நாடான வெனிசுவேலா மீது அமெரிக்க சமீப காலமாகவே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. குறிப்பாக அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கலாசாரத்தை வெனிசுவேலா வளர்ப்பதாகத் தெரிவித்து வந்தது. அதனால் அந்நாட்டிற்குப் பொருளாதார தடை உள்ளிட்ட பல நெருக்கடிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வந்தார்.

வெனிசுவேலா மீது திடீர் தாக்குதல்

இதற்கிடையில் கடந்த ஜனவரி 3 அன்று அமெரிக்க ராணுவப்படைகள் வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அப்போது போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது குற்றம்சாட்டப்பட்டு அவரையும், அவரது மனைவி சிலியாவையும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்

நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்குப் பின் அவரை அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபராக, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் வெனிசுவேலா நிர்வாகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டின் முக்கிய முடிவுகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்து அந்நாட்டின் மீது பல்வேறு நிபந்தனைகளை டிரம்ப் விதித்து வருகிறார்.

அமெரிக்கா கையில் எண்ணெய் வர்த்தகம்

குறிப்பாக வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் ஆலைகளில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கடந்த ஜனவரி 9 அன்று சந்திப்பு நடத்தினார். அப்போது வெனிசுவேலாவின் எண்ணெய் வருவாய் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப், நீதிமன்ற தலையீடுகளில் இருந்து வருவாயைப் பாதுகாக்க இந்தப் பணம் அமெரிக்காவின் கருவூலத்தில் இருக்கும். வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் வருவாயை அமெரிக்கா கவனித்துக்கொள்ளும். அது அந்நாட்டின் அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.

வெனிசுவேலாவின் செயல் அதிபர் டிரம்ப்

இந்நிலையில், தற்போது வெனிசுவேலாவின் செயல் அதிபர் என்று குறிப்பிட்டு விக்கிபீடியா பக்கம் போல் வடிவமைக்கப்பட்ட படத்தைத் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில் 2026 ஜனவரி முதல் பொறுப்பேற்றுக் கொண்டது போல் வடிவமைத்து அவர் பகிர்ந்திருப்பது சர்வதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

US President Trump's post declaring himself the acting president of Venezuela has sparked controversy.