REUTERS
உலகம்

அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பு: இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

அவர்கள் எங்களிடம் வசூலிக்க விரும்பினால் பரவாயில்லை, ஆனால் அதேபோல நாங்களும் அவர்களிடம் வசூலிக்கப்போகிறோம்.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்க பொருட்கள் மீதான அதிக வரி விதிப்பை இந்தியா தொடர்ந்தால், அதேபோல நாங்களும் அதிக வரி விதிப்போம் என எச்சரிக்கை விடுக்கும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, இந்தியா தொடர்பாக டிரம்ப் பேசியவை பின்வருமாறு,

`பரஸ்பர பிரதிபலன். அவர்கள் எங்களுக்கு விதிக்கும், அதே அளவிலான வரியை நாங்கள் விதிக்கிறோம். அவர்கள் வரி விதிக்கிறார்கள். நாங்கள் வரி விதிக்கிறோம். அவர்கள் மீண்டும் வரி விதிக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எங்கள் மீது வரி விதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்கள் மீது வரி விதிப்பது இல்லை.

பரஸ்பர பிரதிபலன் என்ற வார்த்தை முக்கியமானது. ஏனென்றால் யாராவது நம்மிடம் வசூலித்தால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துப் பேச தேவையில்லை. இந்தியா எங்களிடம் 100 சதவீதம் வசூலித்தால், அதற்காக நாங்களும் அவர்களிடம் அதையே வசூலிக்கலாம் இல்லையா? உங்களுக்கு தெரியும், அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்பினால், நாமும் ஒரு சைக்கிளை அனுப்புவோம்.

அவர்கள் எங்களிடம் 100, 200 என வசூலிக்கிறார்கள். இந்தியா அதிகமாக வசூலிக்கிறது. பிரேசிஸ் அதிகமாக வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் வசூலிக்க விரும்பினால் பரவாயில்லை, ஆனால் அதேபோல நாங்களும் அவர்களிடம் வசூலிக்கப்போகிறோம்’ என்றார்.

வரி விதிப்பு தொடர்பான டொனால்ட் டிரம்பின் கருத்துகளை வழிமொழிந்துள்ளார், அவரது அரசில் வர்த்தக செயலாளராக பொறுப்பெற்கவுள்ள ஹோவர்ட் லுட்னிக். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லுட்னிக், `புதிய அரசின் வர்த்தகக் கொள்கையில் பரஸ்பர பிரதிபலன்கள் முக்கியப் பங்கு வகிக்கும். எங்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ, அதுபோலவே நீங்கள் நடத்தப்பட எதிர்பார்க்க வேண்டும்’ என்றார்.