வெளிநாடுகளில், குறிப்பாக நியூயார்க்கில் வைக்கப்பட்டிருக்கும் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமான தங்கத்தின் பாதுகாப்பு விவகாரம், அண்மை காலம் வரை அந்நாட்டில் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியவுடன், இந்த விவகாரம் ஜெர்மனியில் பொது விவாதப் பொருளாக மாறி வருகிறது.
உலகின் இரண்டாவது பெரிய 3,352 டன் தங்க இருப்பு ஜெர்மனியின் மத்திய வங்கிக்கு சொந்தமாக உள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்க அரசுக்குச் சொந்தமான நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட அந்நாட்டுப் பணவியல் அமைப்பு மற்றும் பனிப்போர் காரணங்களுக்காக அது நியூயார்க்கில் உள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியின் பிரதான எதிர்க்கட்சியும், தீவிர வலதுசாரி கட்சியுமான ஏ.எஃப்.டி. (AfD), அமெரிக்காவில் உள்ள ஜெர்மனியின் தங்க இருப்பை நாட்டிற்கு திருப்பிக்கொண்டுவர வேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட கால நட்பு நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் மோதல் போக்கை தொடர்ந்து, தங்கள் நாட்டிற்கு சொந்தமான தங்கம் குறித்த விவாதங்கள் ஜெர்மனியில் மீண்டும் தொடங்கியுள்ளன.
ஜெர்மனியின் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்திற்கு இந்த வாரம் கடிதங்களை அனுப்பியுள்ள அந்நாட்டின் வரி செலுத்துவோர் கூட்டமைப்பு, அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தை திருப்பிக் கொண்டுவரும்படியான கோரிக்கையை வைத்துள்ளது.
`(அமெரிக்க) பெடரல் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்த டிரம்ப் விரும்புகிறார், இது அமெரிக்காவில் உள்ள ஜெர்மனியின் தங்க இருப்புக்களையும் கட்டுப்படுத்தும் நோக்கமாகும். அது எங்கள் பணம், அதை திருப்பிக் கொண்டு வரவேண்டும்’ என்று ராய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு வரி செலுத்துவோர் கூட்டமைப்பின் துணைத் தலைவரான மைக்கேல் ஜேகர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ராய்ட்டர்ஸுக்கு பேட்டியளித்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான ஜெர்மனியின் எம்.பி.யான மார்கஸ் ஃபெர்பெர், `முன்பு போல (அமெரிக்கா) நம்பகமான கூட்டாளியாக இனி இருக்கப்போவது இல்லை.
டிரம்ப் ஒழுங்கற்றவர், வெளிநாட்டு தங்க இருப்புகளை எவ்வாறு கையாள்வது என்ற யோசனைகளை அவர் ஒரு நாள் கொண்டு வருவார் என்பதை நிராகரிக்க முடியாது. தங்க இருப்புகளுக்கான ஜெர்மனி மத்திய வங்கியின் கொள்கை புதிய புவிசார் அரசியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கவேண்டும்’ என்றார்.
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பொவெல் மீது தொடர்ச்சியாக டிரம்ப் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளே இத்தகைய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.