உலகம்

நேரலை விவாதத்தில் நேருக்கு நேர் மோதிய டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்காவின் பென்னிசில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே ஏபிசி நிறுவனம் விவாதத்தை ஏற்பாடு செய்தது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.

விவாதத்தைத் தொடங்கிய கமலா ஹாரிஸ், `டிரம்ப் ஆட்சிக்காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்காவின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. சீன ராணுவத்தை நவீனமயமாக்க, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிப்கள் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவரது ஆட்சியில் வேலையின்மை பிரச்னையுடன், மருத்துவ சேவைகளும் பாதிக்கப்பட்டன. நாட்டின் ஜனநாயகம் மீது மோசமான தாக்குதலை டிரம்ப் நடத்தினார்’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய டொனால்ட் டிரம்ப், `ஜோ பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் அமெரிக்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றி வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்க பைடனின் ஆட்சியே காரணம். கொரோனா தொற்றை மிகச்சிறப்பாகக் கையாண்டு அமெரிக்காவிற்கான சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன்’ என்றார்.

இதை அடுத்துப் பேசிய கமலா ஹாரிஸ், `டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கே வரிச்சலுகை கொடுத்தது, நடுத்தர மக்கள் முன்னேறவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய எந்த வளர்ச்சித் திட்டமும் டிரம்பிடம் இல்லை’ என்றார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், `கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவரிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை. பல நாடுகளில் குற்றச்செயல்கள் குறைந்துவிட்டன. ஆனால் அமெரிக்காவில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கமலா ஹாரிஸிடம் தஞ்சமடைந்துள்ளனர்’ என்றார்.

`குற்றச்செயல்கள் குறித்து மட்டுமே டிரம்புக்குப் பேசத் தெரியும், அவரே ஒரு குற்றவாளிதான். மீண்டும் அதிபரானால் தன் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துவிடலாம் என அவர் நினைக்கிறார்’ என்று பேசினார் கமலா ஹாரிஸ்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிக வாக்குகள் பெற்று அதிபரானது குறித்துப் பெருமையாகப் பேசினார் டிரம்ப். குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் யாரும் இதுவரை பெறாத வகையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

`கடந்த தேர்தலில் தோற்றபோது வன்முறையைத் தூண்டிவிட்டவர் டிரம்ப். நாடு முடுவதும் வன்முறை நடந்தபோது அதை அவர் கைக்கட்டி அமைதியாக வேடிக்கை பார்த்தார். எந்த சூழலிலும் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகிவிடக்கூடாது’ என்று பேசினார் கமலா ஹாரிஸ்.

இந்த விவாதத்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் குறித்து இருவரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டனர். டொனால்ட் டிரம்ப் அதிபரானால் நாடு முழுவதும் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை அமல்படுத்திவிடுவார் என்று குற்றம்சாட்டினார் ஹாரிஸ். இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், `நாடு முழுமைக்குமான கருக்கலைப்புத் தடைச் சட்டம் தேவையில்லை. அதை நான் செய்யமாட்டேன்’ என்றார்.

இந்த விவாதத்தில், இஸ்ரேல்-காஸா போர், ரஷ்யா-உக்ரைன் போர் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், விளைவுகள் போன்றவை குறித்தும் இருவரும் விவாதித்தனர்.