இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு 4 நாள்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விடுத்துள்ளார்.
சமீபத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். அப்போது போர் நிறுத்தத்திற்காக 20 குறிப்புகள் கொண்ட விரிவான திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார். அதில் பயங்கரவாதம் அற்ற மண்டலமாக காஸா மாறும், மக்களின் நலனுக்காக காஸா மறுவடிவமைப்பு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அதன் அடிப்படையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஹமாஸ் தரப்பில், “போர் நிறுத்தத் திட்டங்கள் வகுக்கப்படும்போது எங்களை அழைக்கவில்லை. இதில் எங்கள் முக்கிய கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இஸ்ரேலுக்குச் சாதகமாக உள்ளது. பாலஸ்தீன மக்களுக்கும், காஸா பகுதியில் வசிப்பவர்களுக்கும் இத்திட்டங்கள் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது” போன்ற காரணங்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், போர் நிறுத்தத் திட்டத்திற்கு அடுத்த 4 நாள்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப்,
“போர் நிறுத்தத்திற்கான திட்டத்திற்கு அரபு நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொண்டு விட்டன. ஹமாஸுக்காகக் காத்திருக்கிறோம். அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்குள் ஹமாஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அது சோகமான முடிவாக மாறும். இனி கலந்தாலோசனைக்கு இடமில்லை”
இவ்வாறு கூறினார்.