கோப்புப்படம் REUTERS
உலகம்

டிரம்ப் குற்றவாளி: ஜூரி தீர்ப்பு, தண்டனை விரைவில்

பத்ரி

இதுவரை நடந்திராத வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒருவர் முதன்முறையாகக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, தண்டனைக்காகக் காத்திருக்கிறார்.

டானல்ட் டிரம்ப், 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் அதிபராக இருந்தார். பின்னர் 2020 தேர்தலில் தோற்றுப்போனார். இப்போது மீண்டும் 2024 தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

2016 தேர்தலில்போது டிரம்ப்மீது பல சர்ச்சைகள் எழுந்தன. அதில் ஒன்று, பாலியல்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருடன் டிரம்புடனான பாலியல் உறவு. இந்தத் தகவல்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக டேனியல்ஸுக்குத் தன் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வாயிலாக டிரம்ப் பணம் கொடுத்ததாகப் பேசப்பட்டது.

டேனியல்ஸுக்குப் பணம் கொடுத்ததுகூடப் பெரிய விவகாரம் அல்ல. ஆனால் இது தேர்தல் காலத்தில் தேர்தலில் பின்தங்கிவிடக்கூடாது என்ற காரணத்தால் கொடுக்கப்பட்ட பணம் என்பதால் தேர்தல் செலவு என்ற கணக்கின்கீழ் எழுதப்பட்டு கணக்கு வழக்குகள் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது நியூ யார்க் மன்ஹாட்டன் தலைமை வழக்கறிஞரின் வாதம். டிரம்ப் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தாக்கல் செய்த தேர்தல் கணக்கு வழக்குகளில் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு மைக்கேல் கோஹன் வழியாகக் கொடுத்த பணத்தைக் குறிப்பிடவில்லை.

இதுகுறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் 12 பேர் அடங்கிய ஜூரி குழு, 34 வெவ்வேறு அடிப்படைகளில் டிரம்ப் குற்றவாளி என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அமெரிக்கக் குற்றவியல் வழக்குகளில் ஒருவர் குற்றம் செய்துள்ளாரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ஜூரர்கள் அடங்கிய குழு. தண்டனை தருவது நீதிபதியின் செயல். எனவே அடுத்து நீதிபதி என்ன தண்டனை தரப்போகிறார் என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.

சிறைத் தண்டனை கிட்டத்தட்ட உறுதி என்றாகியுள்ள நிலையில் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக இருப்பாரா, தண்டனை மேல் நீதிமன்றங்களால் நிறுத்திவைக்கப்படுமா, டிரம்புக்கு வாக்குகள் கிடைக்குமா, அவர் ஜெயித்தால் தண்டனை என்ன ஆகும் போன்ற பல சுவாரசியமான கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப்மீது மேலும் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.