டிரம்புடன் கோர் https://x.com/SergioGor
உலகம்

கசந்த நிலையில் உறவுகள்: இந்தியாவிற்கு புதிய தூதரை நியமித்த டிரம்ப்! | Donald Trump | India | Sergio Gor

ஆகஸ்ட் 25 முதல் 29 வரை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அமெரிக்க அதிகாரிகள் புது தில்லிக்கு மேற்கொள்ளவிருந்த திட்டமிட்ட பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஆக. 22) அறிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை அடுத்த வாரத்தில் இருந்து இரட்டிப்பாக்க டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மோசமடைந்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை புது தில்லியில் இருந்தபடி செர்ஜியோ கோர் மேற்பார்வையிடவுள்ளார்.

கூடுதலாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் கோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்புகளை தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க அரசாங்கம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பதவிகளில் ஊழியர்களை நிரப்ப உதவியதற்காக கோருக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக, நிர்வாகத்தின் இலக்குகளை செயல்படுத்துவதில் அவரது பணி முக்கியமானது என்று டிரம்ப் கூறினார்.

`செர்ஜியோ ஒரு சிறந்த நண்பர், அவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருந்து வருகிறார். எனது வரலாற்றுச் சிறப்புமிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் பணியாற்றினார், அதிகமாக விற்பனையாகும் எனது புத்தகங்களை அவர் வெளியிட்டார், மேலும் எங்கள் இயக்கத்தை ஆதரித்த மிகப்பெரிய அளவிலான தேர்தல் பிரச்சார குழு ஒன்றை அவர் வழிநடத்தினார்,’ என்று டிரம்பின் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இது பதவி உயர்வு நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் விவரித்தாலும், அண்மை மாதங்களாக அமெரிக்க நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் பலருடன் கோர் மோதல்போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.

கோருக்கு அமெரிக்க அரசில் செல்வாக்கு இருந்தபோதிலும், அவருக்கு வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் குறைவு என்று ஏ.எஃப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வெளிநாட்டுப் பயணங்களில் உடன் சென்றது, சந்தேகத்தின் பெயரில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை நீக்குவது என வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் கோரின் செயல்பாடுகள் மிகவும் குறைவானவை.

ஆகஸ்ட் 25 முதல் 29 வரை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அமெரிக்க அதிகாரிகள் புது தில்லிக்கு மேற்கொள்ளவிருந்த திட்டமிட்ட பயணம் திடீரென ரத்து செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே கோரின் நியமனம் குறித்த டிரம்பின் அறிவிப்பு வெளியானது.