சீனாவின் ஆதிக்கத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு நீண்ட வளமான எதிர்காலம் அமையட்டும் என்றும் டிரம்ப் வாழ்த்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் இதில் பங்கேற்றார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங் இருநாட்டுத் தலைவர்களையும் வரவேற்றார்.
இந்தியா மற்றும் சீனா இடையே அவ்வப்போது பதற்றமான சூழல்கள் உருவாகி வந்தன. இவற்றுக்கு மத்தியில் 7 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. இந்தப் பயணத்தில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தது பல்வேறு செய்திகளை உணர்த்தின.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தச் சூழலில் தான் மோடி, புதின், ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்காவுடனான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியாவும் திடமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா மீது கண்டனத்தைத் தெரிவித்து அபராதம் விதித்து வருகிறது அமெரிக்கா.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சீனப் பயணம் மற்றும் மோடி, புதின், ஷி ஜின்பிங் சந்திப்பின் தாக்கமாக அதிபர் டிரம்ப் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்களுக்கு நீண்ட, வளமான எதிர்காலம் அமையட்டும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Donald Trump | US President | India Russia China | India Russia | India China | PM Modi | India US | Modi Putin Xi Jinping | Modi Putin | Tianjin Tango