உலகம்

தென் கிழக்கு ஆசியாவில் முதல் முறை: தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு அனுமதி!

ஆசிய கண்டத்தில் நேபாளம், தைவானைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தன்பாலின திருமணங்களை அங்கீகரித்த நாடானது தாய்லாந்து

ராம் அப்பண்ணசாமி

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியைத் தாய்லாந்து அரசு வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தன்பாலின திருமணங்களை அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடானது தாய்லாந்து.

தாய்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட், தன்பாலின திருமணத்துக்கு அனுமதியளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜூன் 18-ல் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஆசிய கண்டத்தில் நேபாளம், தைவானைத் தொடர்ந்து மூன்றாவதாக தன்பாலின திருமணங்களை அங்கீகரித்த நாடானது தாய்லாந்து

இந்த அனுமதியால் திருமண அங்கீகாரம் மட்டுமல்லாமல், வாரிசுடைமை, தத்தெடுப்பு, சுகாதாரம் போன்ற பல விஷயங்களில் பிற குடிமக்களைப் போல தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் இனி அனைத்து சட்டபூர்வ உரிமைகளும் கிடைக்கும்.

கடந்த 10 வருடங்களாகத் தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கக் கோரி தாய்லாந்து நாட்டு மக்கள் போராடி வந்தனர். 2020-ல் தாய்லாந்து நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் திருமணம்தான் சட்டப்பூர்வமானது என்று அறிவித்தது.

கடந்த வருடம் தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முக்கியக் கட்சிகள் பலவும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தன. அதன்படி இந்தச் சட்ட மசோதாவுக்குப் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன.