டெஸ்லா கார் - கோப்புப்படம் REUTERS
உலகம்

டெஸ்லா கார் விபத்து: ரூ. 2,110 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு! | Tesla | USA | Florida

கடந்த 2019-ல் டெஸ்லா கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நெய்பெல் பெனாவிடெஸ் லியோன் என்பவர் கொல்லப்பட்டார்.

ராம் அப்பண்ணசாமி

கொடிய கார் விபத்துக்கு டெஸ்லா நிறுவனத்தின் `தானியங்கி ஓட்டுநர்’ தொழில்நுட்பமே காரணம் என்று குற்றம்சாட்டிய வாதிகளுக்கு 242 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கும்படி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நீதிமன்றம் டெஸ்லா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

கடந்த 2019-ல் புளோரிடாவில் உள்ள கீ லார்கோவில் நடந்த கார் விபத்துக்கு டெஸ்லாவின் தொழில்நுட்ப அமைப்பு ஓரளவுக்குக் காரணம் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

சம்மந்தப்பட்ட டெஸ்லா கார் மோதி நெய்பெல் பெனாவிடெஸ் லியோன் என்பவர் கொல்லப்பட்டார். உடனிருந்த அவரது காதலர் தில்லன் அங்குலோ காயமுற்றார். விபத்தை ஏற்படுத்திய டெஸ்லா காரை ஜார்ஜ் மெக்கீ என்பவர் இயக்கியபோது, ஒரு செவ்ரோலெட் ரக கார் மீது அது மோதியது.

இந்த விபத்திற்கு காரில் உள்ள தானியங்கி தொழில்நுட்பம்தான் காரணம் என்று வாதிகள் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார். எனினும், இந்த விபத்திற்கு டெஸ்லாவின் தானியங்கி தொழில்நுட்பமும் ஒரு காரணம் என்று முடிவுக்கு வந்த நீதிபதி, ஒட்டுமொத்தமாக 242 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2,110 கோடி) வழங்க உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தரப்பில் கூறிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்கள் தரப்பு வழக்கறிஞர் குழு வழியாக டெஸ்லா கூறியதாவது,

`இன்றைய தீர்ப்பு தவறானது. மேலும், வாகனப் பாதுகாப்பை இது பின்னுக்குத் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், டெஸ்லா மற்றும் உயிர்காக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கான ஒட்டுமொத்த வாகனத்துறையின் முயற்சிகளையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

வேகமாக காரை இயக்கி ஓட்டுநர் தவறு செய்துள்ளார் என்பதை சான்றுகள் காண்பிக்கின்றன. ஆக்சிலரேட்டரில் காலை வைத்து - சாலையில் கண்கள் வைக்காமல் கைபேசியை அவர் தேடிக்கொண்டிருந்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.