உலகம்

மத்திய கிழக்கில் பதற்றம்: அதிநவீன ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு வழங்கும் அமெரிக்கா

ராம் அப்பண்ணசாமி

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் அதிகப்படுத்திவரும் வேளையில், அந்நாட்டுக்குத் தாட் ரக ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

வடக்கே லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா, தெற்கே காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் என தன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் இருந்தபடி, இந்த இரு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் தீவிரமாகக் களமாடி வருகிறது இஸ்ரேல். அது மட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, மத்திய கிழக்கில் போர் அபாயம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், அதிபர் ஜோ பைடனின் அறிவுறுத்தலின்படி இஸ்ரேலுக்குத் தாட் ரக ஏவுகணைகள் வழங்கப்படும் என நேற்று (அக்.14) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு வழங்கப்படும் இந்த தாட் ரக ஏவுகணைகளால் அதன் வான்வழிப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் இந்த ஏவுகணை உதவியால் மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்றுவரும் போர் பதற்றப் பிரச்னை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த தாட் ரக ஏவுகணைகளை இயக்கும் வகையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர், `இஸ்ரேலில் ஏவுகணைகளை இயக்க தன் துருப்புகளை அங்கே அனுப்புவதன் மூலம், அவர்களை ஆபத்தில் தள்ளுகிறது அமெரிக்கா’ என்றார்.