துபாயில் தேஜஸ் போர் விமானம் வெடித்து விபத்து: விமானி உயிரிழப்பு  
உலகம்

துபாயில் தேஜஸ் போர் விமானம் வெடித்து விபத்து: விமானி உயிரிழப்பு | Tejas fighter jet crash |

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது...

கிழக்கு நியூஸ்

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் விமானி உயிரிழந்தார்.

துபாயின் அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17 அன்று 2025-ன் விமான கண்காட்சி தொடங்கியது. அதன் கடைசி நாளான இன்று, இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தார்கள். விமான நிலையத்திலிருந்து பறக்கத் தொடங்கிய தேஜஸ் விமானம், சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. துபாய் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்தது. இதுகுறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

இதையடுத்து விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான் கண்காட்சியின் போது இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். உயிர் இழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் தேஜஸ் இலகு ரக போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12 அன்று ஜெய்சல்மாரில் நடைபெற்ற பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. அதன்பிறகு இரண்டாவது முறையாக, தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால்உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானமான தேஜஸ், கடந்த 2001 ஜனவரி 4 முதல் விமானப் படையில் தனது இயக்கத்தைத் தொடங்கியது. இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. சுகோய் போர் விமானத்தைப் போலவே, அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக்கூடியது. முன்னதாக இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவை 2027-ல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show, today. The pilot sustained fatal injuries in the accident.