ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியைத் தாலிபன் அமைப்பினர் கடந்த 2021-ல் கைப்பற்றினர். அதன் பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்தியா வருகை தந்துள்ளார். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐநாவின் பாதுகாப்பு அமைப்பிடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று இந்தியா வந்துள்ளார்.
இந்திய பயணத்தின்போது அமீர் கான் முத்தாகி, தாஜ்மகால் உள்ளிட்ட நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் விதமாக அமீர் கான் முத்தாகியின் இந்த அரசுமுறைப் பயணம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் முக்கிய பகுதியாக அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைப்பேசி மூலம் முத்தாகி உரையாடியதாச் சொல்லப்படுகிறது. அப்போது விடுக்கப்பட்ட அழைப்பின் மூலம், அமீர் கான் முத்தாகி இந்தியா வந்துள்ளார்.
பிரட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரின் இந்தியா பயணத்தின் அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் இந்தியா வந்திருப்பது கவனம் பெறும் நிகழ்வாகிறது. பிரட்டன் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், முத்தாகியுடனான சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.