ஆப்கானிஸ்தானில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் ஜன்னல்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களில் உள்ள ஜன்னல்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆப்கன் பெண்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் பகுதிகளாகக் கருதப்படும் சமையலறை, கிணறு உள்ளிட்ட பகுதிகள் தெரியும் வகையிலுள்ள ஜன்னல்களைப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் இதுமாதிரியான ஜன்னல்களை அடைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நகராட்சி நிர்வாகிகள் கட்டுமானப் பணிகளைக் கண்காணித்து, உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலிபான செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிணறுகளிலிருந்து பெண்கள் நீர் எடுப்பதையும், சமையலறையில் பெண்கள் வேலையில் ஈடுபடுவதையும் பார்ப்பது அநாகரிகமானச் செயலுக்கு வழிவகுக்கலாம் என்று ஸபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாட்டுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பல்வேறு பணிகளில் பெண் ஈடுபடுவதற்குத் தடை, 6-ம் வகுப்புக்கு மேல் பயிலத் தடை, பொது இடங்களில் நிறைய இடங்களுக்குச் செல்லத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அங்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.