உலகம்

சீன ராணுவ நடவடிக்கை அதிகரிப்பு: தைவான் குற்றச்சாட்டு!

தைவான் ஜலசந்தியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவக் கோரி 3 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

தங்கள் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள தென் சீனக் கடல் பகுதியில், இன்று (நவ.23) காலை சீனாவின் 25 போர் விமானங்களும், 7 போர்க்கப்பல்களும் தென்பட்டதாக தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

சமீபகாலங்களில், தங்கள் பிராந்தியத்தைச் சுற்றி அமைந்துள்ள தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக தைவான் குற்றம்சாட்டி வருகிறது. இதை ஒட்டி தங்களின் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது தைவான்.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (நவ.23) காலை தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டவை பின்வருமாறு, `சீன ராணுவத்தின் 25 விமானங்களும், 7 கப்பல்களும் தைவானைச் சுற்றி காலை 6 மணி வரை தென்பட்டன. இதில் 13 விமானங்கள் தைவானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்தன. நிலைமையைக் கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்’.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் 14-வது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தைவான் ஜலசந்தியில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவக் கோரி இந்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

மேலும், தென் சீனக் கடல் பகுதியின் பாதுகாப்பிற்கு இந்த 3 நாடுகளும் தகுந்த ஒத்துழைப்பை வழங்கும் எனவும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 3 நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களின் இந்த கூட்டு அறிவிப்பிற்கு தைவான் வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்தது.