பிற நாடுகளுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை நிறுத்தியுள்ளது அமெரிக்க அரசு. இந்த நடவடிக்கையில் இருந்து இரு நாடுகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், எகிப்து நாடுகளைத் தவிர்த்து அமெரிக்க அரசு இதுவரை வழங்கி வந்த அனைத்து அயலக நிதியுதவிகளையும் நிறுத்துவதற்கான உத்தரவை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு வழங்கி வரும் உணவு மற்றும் ஆயுத உதவிகளை மட்டும் அமெரிக்க அரசு நிறுத்தவில்லை என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் `முதலிடத்தில் அமெரிக்கா’ கொள்கையின்படி அயலக நிதியுதவிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க உள்துறை செயலர் மார்கோ ரூபியோ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `முன்மொழியப்பட்ட புதிய நிதியுதவிகள் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கும் வரை, புதிய நிதியுதவிகள் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த புதிய முடிவால் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அதிகமாகப் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பிற்கு முந்தைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியது.
டிரம்ப் அரசின் இந்த முடிவால் ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயை எதிர்கொள்ள ஆஃப்ரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது.