கோப்புப்படம் 
உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் பிரிவான ஹஃபிஸ் குல் பஹதுர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பாகிஸ்தானிய தலிபானின் தற்கொலைத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண வடக்கு வாஸிரிஸ்தான் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ கான்வாய் மீது மோதினார். இது வெடித்ததில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். ராணுவ வீரர்கள் 10 பேர் காயமடைந்தார்கள். அப்பாவி மக்களும் 19 பேர் காயமடைந்தார்கள்" என்றார்.

அருகிலுள்ள இரு வீடுகளின் மேற்கூரையும் சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 6 பேர் காயமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் பிரிவான ஹஃபிஸ் குல் பஹதுர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு, பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலகளாவிய பயங்கரவாதத் தரவுகளின்படி, 2023 உடன் ஒப்பிடுகையில் 2024-ல் பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் விகிதம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

அண்மையில், அங்கு பலூச் விடுதலை ராணுவம் ஜாஃபர் பயணிகள் விரைவு ரயிலில் மேற்கொண்ட தாக்குதலில் 21 பயணிகள் உயிரிழந்தார்கள். 4 துணை ராணுவப் படையினர் உயிரிழந்தார்கள்.