உலகம்

இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர போராட்டம்: வங்கதேசத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

1971-ல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு அந்நாட்டு அரசுப் பதவிகளில் 30% இடங்கள் ஒதுக்கப்படுகிறது

ராம் அப்பண்ணசாமி

அரசுப் பணிகளில் சேர வங்கதேசத்தில் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டு வரக் கோரி அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று (ஜூலை 16) மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போரட்டத்தில் 3 மாணவர்கள் உட்பட, 6 நபர்கள் மரணமடைந்தனர்.

இதை அடுத்து மறு உத்தரவு வரும் வரை அந்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மதராஸாக்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் போன்றவற்றைக் கால வரையின்றி மூட வங்கதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கதேசத்தின் 4 முக்கிய நகரங்களான டாக்கா, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோகிராம் ஆகியவற்றில் உள்ள நெடுஞ்சாலைகளும், ரயில் நிலையங்களும் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டன. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை காவல்துறையினர் உபயோகித்தனர்.

வங்கதேச அரசுப் பணிகளில் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையின் கீழ், 1971-ல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு 30% இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

இதை எதிர்த்து 2018-ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, இந்த 30% இட ஒதுக்கீடு முறை வங்கதேச அரசால் கைவிடப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வங்கதேச நீதிமன்றம் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கான 30% இட ஒதுக்கீடு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டது. இதனால் நேற்று மீண்டும் அந்நாட்டில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா, `1971 போரில் பாகிஸ்தானுடன் கைகோத்து வங்க தேச நாட்டின் உருவாக்கத்தை எதிர்த்தவர்களை விட, நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு அரசின் பலன் சேர வேண்டும்’ என்றார்.

கடந்த ஜனவரியில் தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றார் ஷேக் ஹசீனா.