இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல அக்டோபர் 1 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் வெளிவரும் டெய்லி மிரர் என்ற செய்தித்தாள், வரும் அக்டோபர் 1-ல் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்ற இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஈரான், இஸ்ரேல், ஜப்பான், மலேசியா, நேபாளம், நியூசிலாந்து, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு விசா இல்லாமல் இலங்கைக்குச் செல்லலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1-ல் முதல் முறையாக இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல 6 மாதங்களுக்கு விசா தேவையில்லை என்று உத்தரவிட்டது இலங்கை அரசு. இப்போது அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இலங்கை அரசு விசா ரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகாரித்து, வருமானத்தைப் பெருக்கும் ஒரு வழியாக இலங்கை அரசு இதை முன்னெடுத்துள்ளது.