ANI
உலகம்

பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரிந்த டிராகன் விண்கலம்

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.15 மணி முதல் இவர்கள் பூமிக்குத் திரும்பும் நிகழ்வை நேரலை செய்யத் தொடங்குகிறது நாசா.

கிழக்கு நியூஸ்

சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது டிராகன் விண்கலம்.

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்தாண்டு ஜூன் 5 அன்று 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றார்கள். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் விண்வெளி மையத்திலேயே சுமார் 9 மாதங்களுக்கு மேல் தங்க வேண்டியதாயிற்று.

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களை மீட்பதற்காக ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்தது நாசா. ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் கடந்த மார்ச் 15 அன்று சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் கடந்த 6 மாதங்களாக விண்வெளி மையத்தில் பணியாற்றி வந்தார்கள். இவர்களுடையத் திட்டக்காலம் முடிவடைந்துவிட்டதால், இவர்களும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புகிறார்கள்.

இவர்களை மீட்பதற்காக விண்வெளி மையத்துக்குச் சென்றுள்ள டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றுவதற்காகப் புதிய விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ரஷியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இதில் புறப்பட்டுச் சென்றார்கள். டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாகச் சென்றடைந்து. புதிய விண்வெளி வீரர்கள் நால்வரையும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.

இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் பூமிக்குத் திரும்புகிறார்கள். முதலில் புதன்கிழமைக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை சூழல்கள் காரணமாக முன்கூட்டியே பூமிக்குத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாசா மேற்கொண்டது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களும் டிராகன் விண்கலத்துக்குள் சென்றார்கள். பிறகு திட்டமிட்டபடி டிராகன் விண்கலமானது சர்வதேச விண்வெளி மையத்தை விட்டு வெற்றிகரமாக காலை 10.15 மணிக்குப் பிரிந்தது.

இதன்மூலம், 9 மாதங்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் 17 மணி நேர பூமிக்குத் திரும்பும் பயணம் தொடங்கியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.15 மணி முதல் இவர்கள் பூமிக்குத் திரும்பும் நிகழ்வை நேரலை செய்யத் தொடங்குகிறது நாசா. அதிகாலை 3.27 மணிக்கு இவர்கள் நால்வரும் பாதுகாப்பாகக் கடல் பகுதியை அடைவார்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.