உலகம்

ஏவுதளத்துக்குத் திரும்பிய விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை

சில மாதங்களுக்கும் முன்பு இதேபோல ஏவப்பட்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்பவில்லை.

ராம் அப்பண்ணசாமி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தை சுமந்துகொண்டு விண்வெளிக்கு ஏவப்பட்ட அந்நிறுவனத்தின் சூப்பர் ஹெவி ராக்கெட்டின் முதல்நிலை பூஸ்டர், வெற்றிகரமாக ஏவுதளத்துக்குத் திரும்பி சாதனை படைத்தது.

நேற்று (அக்.13) காலை 7.25 மணி அளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டெக்ஸாஸ் ஏவுதளத்திலிருந்து, ஸ்டார்ஷிப் விண்கலத்தை சுமந்துகொண்டு அந்நிறுவனத்தின் 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனை அடுத்து வானில் சுமார் 70 கி.மீ. உயரம் வரை பறந்தபிறகு ஸ்டார்ஷிப் விண்கலத்திலிருந்து பிரிந்தது சூப்பர் ஹெவி ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர்.

அதன்பிறகு ஸ்டார்ஷிப் விண்கலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்திய பெருங்கடலில் இறங்குவதற்கான பயணத்தை மேற்கொண்டது. அதே  நேரத்தில், சூப்பர் ஹெவி ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் டெக்ஸாஸ் ஏவுதளத்திற்குத் திரும்பும் பணியில் ஈடுபட்டிருந்தது.

சில மாதங்களுக்கும் முன்பு இதேபோல ஏவப்பட்ட சூப்பர் ஹெவி ராக்கெட்டின் பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்பவில்லை. ஆனால் நேற்று திட்டமிட்டபடி மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து டெக்ஸாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது சூப்பர் ஹெவி ராக்கெட்டின் பூஸ்டர்.

இந்த சூப்பர் ஹெவி ராக்கெட்டின் பூஸ்டரை, டெக்ஸாஸில் உள்ள ’மெக்காஸில்லா’ எனப்படும் ஸ்பேஸ் எக்ஸின் ஏவுதளம், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்டக் கைகளால் கச்சிதமாகப் பிடித்து சாதனை புரிந்தது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பூமிக்குத் திரும்பிய இந்த பூஸ்டரை மீண்டும் பயன்படுத்தி வேறொரு விண்கலத்தை ஏவ முடியும்.

கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மேற்கொண்டது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.