உலகம்

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை!

தனியுரிமை சம்மந்தப்பட்ட ஒரு நபரின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள டீப்சீக் செயலி தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலிக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தென் கொரிய அரசு.

குறைவான செலவில் சீனாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் செயலியான டீப்சீக் அண்மையில் உலகம் முழுவதும் பேசுபொருளானது. சாட்ஜிபிடி போன்ற அமெரிக்க சாட்பாட்களுக்கு டீப்சீக் கடும் சவாலளிக்கும் என்று ஆரூடம் கூறப்பட்டது.

டீப்சீக் செயலியைப் பயன்படுத்தத் தங்கள் ஊழியர்களுக்கு தடை விதித்து தென் கொரிய அரசு நிறுவனங்கள் முன்பு உத்தரவிட்டன. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டீப்சீக் செயலியை பதிவிறக்கம் செய்யத் தடை விதித்து தற்போது உத்தரவிட்டுள்ளது தென் கொரிய அரசு. இதனால் அந்நாட்டில் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டீப்சீக் செயலி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனியுரிமை சம்மந்தப்பட்ட ஒரு நபரின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள டீப்சீக் செயலி தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளது தென் கொரிய அரசு. இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப டீப்சீக் செயலியின் பயன்பாடு குறித்து முழுமையாக ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் செயலியை புதிதாகப் பதிவிறக்கம் செய்ய தென் கொரிய அரசு தடை விதித்திருந்தாலும், அந்த தடை உத்தரவு அமலாவதற்கு முன்பு அதைப் பதிவிறக்கம் செய்த பயனர்கள் செயலியைப் பயன்படுத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேநேரம் டீப்சீக் செயலி குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது தென் கொரிய அரசு.