இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு (கோப்புப்படம்) REUTERS
உலகம்

ஹமாஸ் தலைவர் சின்வர் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் பிரதமர்

கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்தவர் யஹ்யா சின்வர்.

கிழக்கு நியூஸ்

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்தவர் யஹ்யா சின்வர்.

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவர் என்றும் பாதுகாப்புப் படை தெரிவித்தது. இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். எனினும், ஹமாஸ் தரப்பிலிருந்து இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.

மூன்று பயங்கரவாதிகளை அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல் கொடுத்த பிறகு, இந்த இடத்தில் இஸ்ரேல் பிணைக் கைதிகள் உள்ளனரா என இஸ்ரேல் பாதுகாப்புப் படை சோதனை செய்தது. ஆனால், இங்கு இஸ்ரேல் பிணைக் கைதிகள் யாரும் கிடைக்கவில்லை.

லெபனானில் வான்வழித் தாக்குதல் மூலம் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹமாஸின் மற்றொரு மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். தெஹ்ரான் மற்றும் ஹமாஸ் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என குற்றம்சாட்டியது. ஆனால் இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இந்த வரிசையில் ஹமாஸ் தலைவர் சின்வரும் தற்போது கொல்லப்பட்டுள்ளார்.

சின்வரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர், ஹமாஸ் போராளிகளிடம் இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.