உலகம்

வங்கதேச வன்முறை: கண்டவுடன் சுட காவல் துறை உத்தரவு

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தில் வன்முறை நிலவி வரும் நிலையில், கடுமையான ஊரடங்கைப் பிறப்பித்துள்ள அந்த நாட்டு காவல் துறை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்துக்காகப் போராடியவர்களின் வழித்தோன்றலுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் முறை 2018 வரை நடைமுறையில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை வங்கதேச அரசு 2018-ல் ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீடு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் நீக்கியது.

இந்த இடஒதுக்கீடு முறைக்கு எதிராக அந்த நாடு முழுக்க மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கதேசம் 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியே முன்னிலை வகித்தது. எனவே, இந்த இடஒதுக்கீடு முறையால் அவாமி லீக் கட்சியினரே பெரும்பாலும் பயன்பெறுவார்கள் என்பதால், தகுதியின் அடிப்படையிலான முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், வங்கதேசம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

வன்முறையைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களைப் பத்திரமாக திரும்ப அழைத்து வருவதற்கானப் பணிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. இதுவரை 978 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்.

வன்முறையை ஒட்டி, வங்கதேசம் முழுக்க கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கவுள்ளது. இதன்பிறகு, சூழலுக்கேற்ப ஊரடங்கு குறித்து முடிவெடுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. அத்தியாவசியத் தேவைக்காக இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 47 மாவட்டங்கள் வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளார்கள், 1,500 பேர் காயமடைந்துள்ளார்கள். வன்முறையைத் தொடர்ந்து, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.