ANI
உலகம்

அமெரிக்கா தான் காரணம்: மௌனம் கலைத்த ஷேக் ஹசீனா

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறைக்கு அமெரிக்காதான் காரணம் என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. இந்தப் போராட்டம் உச்சத்தைத் தொட்டதையடுத்து, அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த திங்கள்கிழமை அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, அங்கு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், அவாமி லீக் கட்சியினர் மற்றும் நாட்டு மக்களுக்கான செய்தியில் ஷேக் ஹசீனா அமெரிக்காவைக் குறிப்பிட்டுள்ளார். இந்த உரை இன்னும் நிகழ்த்தப்படாத நிலையில், உரையின் விவரங்கள் மட்டும் வெளி வந்துள்ளன.

இதன்படி, ஷேக் ஹசீனா கூறியதாவது:

"உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே நான் ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்கள் மீது ஆட்சியில் அமர வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், இதை நான் அனுமதிக்கவில்லை. இதனால்தான் நான் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே ராஜினாமா செய்துவிட்டேன்.

செயின்ட் மார்டின் தீவின் இறையாண்மையைத் தியாகம் செய்து, வங்கக் கடலின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள அமெரிக்காவை அனுமதித்திருந்தால், நான் ஆட்சியில் தொடர்ந்திருப்பேன். அடிப்படைவாதிகள் பிரசாரத்துக்கு மயங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் வங்கதேசத்தில் இருந்திருந்தால், நிறைய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். இதனால்தான் நான் ராஜினாமா செய்துவிட்டேன். நீங்கள் தான் என்னுடைய வலிமை. உங்களுக்கு நான் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டீர்கள். எனவே, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.

நம்பிக்கையை இழக்க வேண்டாம். நான் விரைவில் வங்கதேசம் திரும்புவேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். ஆனால், எந்த மக்களுக்காக என் தந்தையும், குடும்பத்தினரும் உயிரிழந்தார்களோ, அதே வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

நான் வங்கதேசத்திலேயே இருந்திருந்தால், நிறைய உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும், நிறைய வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். இதனால்தான் நாட்டைவிட்டு வெளியேறுவது என மிகக் கடினமான முடிவை நான் எடுத்தேன். நீங்கள்தான் என்னைத் தலைவராகத் தேர்வு செய்தீர்கள்.

நான் ஒருபோதும் உங்களை (மாணவர்களை) ராஸாகர்ஸ் (1971-ல் பாகிஸ்தான் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட துணை ராணுவப் படை) என்று அழைக்கவில்லை. மாறாக என்னுடைய வார்த்தைகள் உங்களைத் தூண்டுவதற்காகத் திரிக்கப்பட்டன. நான் பேசிய காணொளியை முழுமையாகப் பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார் ஷேக் ஹசீனா.