வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (கோப்புப்படம்) 
உலகம்

வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது: ஷேக் ஹசீனா | Sheikh Hasina |

வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க யூனுஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை...

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தில் உருவாகியிருக்கும் பதற்றமான சூழல், வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மாணவர் தலைவரான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 18 அன்று உயிரிழந்தார். இதனால் அங்கு கடந்த சில நாள்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தப்பி வந்ததாக வங்கதேச ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், ஏஎன்ஐ செய்தித் தளத்தின் பல்வேறு கேள்விகளுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மின்னஞ்சல் மூலம் பேட்டியளித்துள்ளார். அதில், வங்கதேசத்தில் நிலவும் வன்முறைச் சூழ்நிலை குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“வங்கதேசம் எப்போதும் அனைவருடனும் நட்பையே நம்பி வருகிறது. யாருக்கும் தீங்கிழைக்காதது. பாகிஸ்தானுடன் வங்கதேசம் நிலையான உறவைக் கொண்டிருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் யூனுஸ் வங்கதேசத்தைத் தலைகீழாக ஆக்கியிருக்கிறார். இது பொருத்தமற்றது. நமது நீண்டகால நட்பு நாடுகளில் பலரை தேவையில்லாமல் அந்நியப்படுத்திய அவர், இப்போது உலக அரங்கில் ஒரு நண்பரைத் தேடுகிறார். வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க யூனுஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே தலைமுறைகளை பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. வங்கதேசத்தினர் மீண்டும் சுதந்திரமாக வாக்களிக்க முடிந்தால், தேசிய நலன்களுக்குச் சேவை செய்யும் வெளியுறவுக் கொள்கை அமைக்கப்படும். அது தற்காலிகமாக அதிகாரத்தைக் கைப்பற்றிய தீவிரவாதிகளின் சித்தாந்த கற்பனைகளுக்கு இடமளிக்காது. வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் இந்த இடைக்கால அரசு போன பிறகும் பிறகும் நீண்ட காலம் நீடிக்கும்.

வங்கதேசத்தில் சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றமான சூழல், வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. யூனுஸின் இடைக்கால ஆட்சியால் வலுவடைந்திருக்கும் தீவிரவாதிகளால் இந்த விரோதம் உருவாக்கப்படுகிறது. இவர்கள்தான் இந்தியத் தூதரகம், ஊடக அலுவலகங்கள் மற்றும் சிறுபான்மையினரை எந்த தடையுமின்றி தாக்குபவர்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு தப்பி ஓடச் செய்தவர்கள். யூனுஸ், அத்தகைய நபர்களைப் பதவியில் அமர்த்தி, தண்டனைப் பெற்ற பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்துள்ளார். பொறுப்பான அரசாங்கமாக இருந்தால், தூதரகத்தைப் பாதுகாத்து, அவர்களை அச்சுறுத்துபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும். மாறாக, குண்டர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களைப் போராளிகள் என்றழைக்கிறார் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்.” என்றார்.

Former Prime Minister Sheikh Hasina has said that the recent tense situation in Bangladesh was deliberately created on her interview through E mail for ANI