படம்: https://x.com/elonmusk 
உலகம்

கமலா ஹாரிஸ் நாட்டை அழித்துவிடுவார்: டொனால்ட் டிரம்ப்

கிழக்கு நியூஸ்

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராகத் தேர்வானால் நாட்டை அழித்துவிடுவார் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இணையத்தில் உரையாடினார்கள்.

"அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மைய நீரோட்ட நிர்வாகமாக இருக்கும் என நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அவருடைய நிர்வாகம் அப்படியானது அல்ல. கமலா ஹாரிஸிடம் மேற்கொண்டு 'இடது' நிர்வாகத்தை நாம் பார்க்கவிருக்கிறோம்.

நமக்கு தற்போது அதிபர் இல்லை. கமலா ஹாரிஸ் இன்னும் மோசமானவர். சான் பிரான்சிஸ்கோ, காலிஃபோர்னியாவை கமலா ஹாரிஸ் அழித்தார். அதிபராகத் தேர்வானால் அவர் நாட்டையே அழித்துவிடுவார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராகத் தேர்வானால், 5-6 கோடி மக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்துவிடுவார்கள். நாம் நினைப்பதைக் காட்டிலும் ஏராளமான சட்டவிரோதக் குடியேறிகளை கமலா ஹாரிஸ் அனுமதித்துள்ளார். உலக நாடுகள் தங்களுடைய சிறைகளிலிருந்து கைதிகளை விடுவித்து நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கிரார்கள். அவர்கள் குற்றங்களையும், வன்முறைகளையும் அமெரிக்காவுக்கு கொண்டு வருகிறார்கள்.

பைடன் தலைமையில் அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கத்தால் பேரழிவைச் சந்தித்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நிறையப் பணம் சேமித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அனைத்துப் பணத்தையும் செலவழித்தும்கூட, கடன் வாங்கிதான் வாழ்கிறார்கள்" என்றார் டொனால்ட் டிரம்ப்.