பயங்கரவாதம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ஆவணத்தில் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் குயிங்டாவோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட பத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையை வகிக்கும் சீனாவும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானும், கூட்டு அறிக்கை ஆவணத்தில் பயங்கரவாதம் குறித்து இடம்பெறும் வாக்கியங்களை நீக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக இருந்துள்ளார்.
பயங்கரவாதம் குறித்த பிரச்னையில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக, இறுதியில் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்த உச்சி மாநாட்டில், இந்திய மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்கள் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் உடன், ராஜ்நாத் சிங் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
உச்சி மாநாட்டில் ஆற்றிய தனது உரையில், பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் அந்நாட்டின் மீது ராஜ்நாத் சிங் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். `சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்க, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாக பயன்படுத்துகின்றன’ என்று அவர் கூறினார்.
மேலும், `இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமளிக்கக்கூடாது. அத்தகைய நாடுகளை விமர்சிக்க சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக்கூடாது’ என்றார்.