இஸ்ரேலுடனான 12 நாள் போரின்போது, அவமானகரமான மரணம் ஏற்படுவதில் இருந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தன்னால் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவை வென்றுவிட்டதாக ஈரான் உச்ச தலைவர் காமேனி அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, `அசிங்கமான மற்றும் அவமானகரமான மரணத்தில் இருந்து காமேனியை காப்பாற்றியதாக’ டிரம்ப் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் கடுமையான வார்த்தைகளால் டிரம்ப் எழுதிய ஒரு பதிவில், இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றதாக காமேனி கூறியது பொய் என்றும், மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதர் இப்படிப் பொய் சொல்லக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலின்போது அந்நாடு அழிந்துவிட்டது என்றும், அதன் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகியவை அழிக்கப்பட்டன என்றும், காமேனி எங்கு தங்கியிருந்தார் என்பதை அறிந்திருந்ததாலும் அவரைக் கொல்ல இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளை தாம் அனுமதிக்கவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
`நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன்.. அதற்கு அவர் நன்றி அதிபர் டிரம்ப் என்று கூறவேண்டியதில்லை..’ என்றும் தன் பதிவில் டிரம்ப் எழுதியுள்ளார்.
மேலும், `உண்மையில், போரின் இறுதி கட்டத்தின்போது நேரடியாக தெஹ்ரானுக்கு சென்றுகொண்டிருந்த இஸ்ரேலின் விமான குழுக்களை திரும்பப் பெறவேண்டும் என்று நான் கோரினேன். மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும், மேலும் பல ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். அதுவரை நடந்த போரில் மிகப்பெரிய தாக்குதலாக அது இருந்திருக்கும்’ என்றார்.