தந்தை கலீத் பின் தலால் அல் சௌத்துடன் இளவரசர் அல் வலீத். https://x.com/calm_933
உலகம்

சௌதி அரேபியாவின் தூங்கும் இளவரசர் காலமானார்! | Sleeping Prince | Saudi Arabia

15 வயதில் இங்கிலாந்தில் உள்ள ஒரு ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கார் விபத்தில் இளவரசர் சிக்கினார்.

ராம் அப்பண்ணசாமி

Sleeping Prince of Saudi Arabia Is No More: கடந்த 2005-ல் லண்டனில் நடைபெற்ற ஒரு கார் விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், `தூங்கும் இளவரசர்’ என்று பரவலாக அறியப்பட்டவருமான இளவரசர் அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சௌத், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஜூலை 19) காலமானார்.

ஏப்ரல் 1990-ல் பிறந்த இளவரசர் அல் வலீத், சௌதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் கலீத் பின் தலால் அல் சௌத்தின் மூத்த மகனாவார். 15 வயதில் இங்கிலாந்தில் உள்ள ஒரு ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கிய அவருக்கு, மூளையில் காயம்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டது.

அவசர சிகிச்சை வழங்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து, சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரத்திற்கு மாற்றப்பட்ட அவருக்கு, ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியாக மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டு வந்தது.

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த காரணத்தால் காலப்போக்கில் இளவரசர் அல் வலீத் `தூங்கும் இளவரசர்’ என்று அறியப்படத் தொடங்கினார். மேலும் அவரது விரல்களை லேசாக உயர்த்துவது போன்ற குறைந்தபட்ச அசைவைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகின.

இது அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 36 வயதான இளவரசர் அல் வலீத் நேற்று (ஜூலை 19) உயிரிழந்தார்.

இளவரசரின் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது தந்தை கலீத் பின் தலால் அல் சௌத் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியதாவது,

`அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடனும், ஆழ்ந்த சோகம் மற்றும் துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் அல் சௌத்திற்காக நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும், அவர் இன்று அல்லாஹ்வின் கருணையால் காலமானார்’ என்றார்.