REUTERS
உலகம்

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா வழங்க தற்காலிகத் தடை: சௌதி அரேபியா

கடந்தாண்டு ஹஜ் புனித பயணத்தின்போது அதிகம் பேர் கூடியதாலும் வெப்பம் காரணமாகவும்...

கிழக்கு நியூஸ்

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா வழங்க சௌதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

உம்ரா, வணிகம், குடும்பம் சார்ந்த விசாகளுக்கு ஜூன் மாதத்தின் முதலிரு வாரங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜுன் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. ஹஜ் புனித யாத்திரையின்போது முறையாகப் பதிவு செய்யாதவர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் சௌதி அரேபியா இம்முடிவை எடுத்துள்ளது. உம்ரா விசா மற்றும் பயண விசாகளை பயன்படுத்தி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கூடுதல் காலம் சௌதி அரேபியாவிலேயே தங்கிவிட்டு முறையான நடைமுறை இல்லாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகக் கூட்ட நெரிசலும் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஹஜ் புனித பயணத்தின்போது அதிகம் பேர் கூடியதாலும் வெப்பம் காரணமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இதைக் கருத்தில் கொண்டு மக்கள் எண்ணிக்கை அதிகம் கூடுவதைத் தடுக்க சௌதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிகம் சார்ந்த விசா, குடும்ப விசா உள்ளிட்டவற்றின் மூலம் சௌதி அரேபியாவுக்குள் நுழைந்து விசா விதிகளை மீறி வேலை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சட்டவிரோத வேலைவாய்ப்பைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது சௌதி அரேபியா.

இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டன், அல்ஜீரியா, சுடான், எதியோபியா, துனிசியா, யேமென், மொரோக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு அந்நாட்டு அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. உம்ரா, வணிகம் சார்ந்த மற்றும் குடும்ப விசாகளுக்கு மட்டுமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற விசா நடைமுறைகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.

அதேசமயம், உம்ரா விசா வைத்துள்ள தனிநபர்கள் ஏப்ரல் 13 வரை சௌதி அரேபியாவுக்குச் செல்லலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.