வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் இடிக்கப்படும் வீடு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேயின் குடும்பத்திற்குச் சொந்தமானது அல்ல என்று அம்மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்ததாக இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சத்யஜித் ரேயின் குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக வீடு வங்கதேசத்தில் இடிக்கப்படுவதாக நேற்று (ஜூலை 16) பரவிய செய்தியை அடுத்து, இத்தகைய விளக்கம் இன்று வெளியாகியுள்ளது.
மைமென்சிங் மாவட்டத்தில் இடிக்கப்பட்ட கட்டடத்திற்கும் சத்தியஜித் ரேயின் மூதாதையர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முடிவுக்கு வருவதற்கு முன்பு, அது குறித்து உள்ளூர் அதிகாரிகள் விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மைமென்சிங் துணை ஆணையர் மொஃபிதுல் ஆலம் உறுதிப்படுத்தினார்.
`புதன்கிழமை அந்த சொத்தின் அரசாங்கப் பதிவுகளைச் சரிபார்க்க ஒரு கூட்டத்தை நடத்தினோம். உள்ளூர் பெரியவர்களிடமும் பேசினோம், வரலாற்று ஆவணங்களையும் சரிபார்த்தோம். இடிக்கப்படவிருந்த வீடு மைமென்சிங் குழந்தைகள் அகாடமியின் அலுவலகமாக இருந்தது.
சத்யஜித் ரேயின் மூதாதையர்களுடன் இதற்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க எந்த பதிவுகளும் இல்லை’ என்று ஆலம் கூறியதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர்வாசிகள் டர்லோவ் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ரேயின் மூதாதையர் வீடு அதே நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியது.
"ரேயின் மூதாதையர் சொத்து இன்னும் அப்படியே இருப்பதை நாங்கள் உறுதிசெய்துள்ளோம். அதன் தற்போதைய உரிமையாளரிடம் நாங்கள் பேசியுள்ளோம். அந்த சொத்தை அவர் ரேயின் குடும்பத்தினரிடமிருந்து நேரடியாக வாங்கியதையும், அதை நிரூபிக்க ஆவணங்கள் அவரிடம் இருப்பதையும் உறுதிப்படுத்தினார். அதற்கு அருகிலுள்ள இடிக்கப்படும் கட்டடம் ரேயின் மூதாதையர் வீடு என்று தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்றார் ஆலம்.
சத்யஜித் ரேயின் தாத்தாவும் பிரபல எழுத்தாளரும், பதிப்பாளருமான உபேந்திர கிஷோர் ரே சௌத்ரி கட்டிய நூற்றாண்டு பழமையான கட்டடம் வங்கதேசத்தில் இடிக்கப்பட்டதாக நேற்று (ஜூலை 17) செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.