இலங்கையின் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி சரத் ஃபொன்சேகா வரும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 16-க்குள் இலங்கை அதிபர் தேர்தலை நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தன் எக்ஸ் கணக்கில், `கடந்த 76 வருடங்களாக தகுதியற்ற அரசியல்வாதிகளால் இலங்கை திவாலாகியுள்ளது. இலங்கையின் வளர்ச்சிக்கு ஊழலை நாம் ஒழிக்க வேண்டும். இலங்கை மக்களுக்காக நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார் சரத் ஃபொன்சேகா.
2009-ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில், விடுதலை புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கியப் பங்காற்றினார் அன்றைய ராணுவத் தளபதி ஃபொன்சேகா. இதற்காக அவர் ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2010-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக, அன்றைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஃபொன்சேகா.
இதை அடுத்து இராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக ஃபொன்சேகா மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஃபொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 2012-ல் விடுவிக்கப்பட்டார் ஃபொன்சேகா. மேலும் 2015-ல் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கினார் அன்றைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா.
அதிபர் தேர்தலில் நிற்கப்போவதாக ஃபொன்சேகா அறிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கையின் அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதாசா மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர் அனுரா குமாரா திஸ்ஸாநாயகே ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.