ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லியில் ஸ்புட்னிக் நடத்திய நிகழ்ச்சியொன்றில் ரஷிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், "ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வருவார் என நம்புகிறோம். அவர் இந்தியா வருவதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். அதிபர் புதின் இந்தியா வருவதற்கான தேதிகளை இறுதி செய்து வருகிறோம்" என்றார்.
ரஷிய அதிபர் புதின் இந்தியா வரும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் தொடங்கிய பிறகு, அவர் இந்தியா வருவது இதுவே முதன்முறையாக இருக்கும்.
ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியைச் சந்தித்துப் பேசினார். அப்போது எல்லையில் படைகளையும் பதற்றத்தையும் குறைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தச் சூழலில்தான் ரஷிய அதிபர் மாளிகையிலிருந்து புதின் வருகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்புட்னிக் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் சீனா இடையிலான பேச்சுவார்த்தையை புதின் வரவேற்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறினார். அதேசமயம், இதில் ரஷியாவின் பங்கு எதுவும் இல்லை என்று கூறிய அவர், ரஷியா - உக்ரைன் போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்வதையும் புதின் வரவேற்பதாகக் கூறினார்.