ஒரே இரவில், உக்ரேனிய நகரங்கள் முழுவதிலும் 367 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உபயோகித்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் மேற்கொண்ட இந்த சரமாரியான தாக்குதலில் ஸைட்டோமிர் பகுதியில் மூன்று குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். தலைநகர் கீவ், கார்கிவ், மைகோலெவ், டெர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி ஆகிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் விமானப்படை 266 டிரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உக்ரைனில் சேதம் மிகப்பெரிய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் இந்த தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்த விவகாரத்தில் அமைதியாக காத்து வருவதற்காக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சனத்தை முன்வைத்தார். அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக வலுவான தடைகளை விதிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
`அமெரிக்காவின் மௌனமும், உலக நாடுகளின் மௌனமும் புதினை ஊக்குவிக்கின்றன’ என்று அவர் டெலிகிராமில் எழுதினார். மேலும், `இதுபோன்ற ரஷ்யாவின் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும், ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளுக்குப் போதுமான காரணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.
`அழுத்தம் கொடுக்காமல் எதுவும் மாறாது, ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற கொலைகளுக்காக மட்டுமே படைகளை உருவாக்கும்’ என்று உக்ரைன் அதிபரின் தலைமை செயலர் ஆண்ட்ரி யெர்மக் டெலிகிராமில் எழுதினார். `ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் வரை ரஷ்யா போராடும்’ என்று அவர் குற்றம்சாட்டினார்.