அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (மே 19) ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினுடன் இரண்டு மணி நேரம் உரையாடினார். இதைத் தொடர்ந்து, தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில், `ரஷ்யாவும் உக்ரைனும் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவுள்ளன’ என்று அவர் அறிவித்தார்.
இருந்தாலும், எந்தவொரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படுவதற்கு நேரம் எடுக்கும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐரோப்பாவுடன் சேர்ந்து புதிய தடைகளை விதிக்கத் தயாராக இல்லை என்று டிரம்ப் உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று நம்புகிறேன். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளனர்.
அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். ரத்தக்களரியான இந்த பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா விரும்புகிறது; அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளையும், செல்வத்தையும் உருவாக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல், தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியின்போது, வர்த்தகத்தால் உக்ரைனும் பயனடையும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்.
புதினுடனான அழைப்புக்குப் பிறகு, இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் ஃப்ரைட்ரிக் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.
போப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன், இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்பாடுகள் தொடங்கட்டும்’ என்றார்.
டிரம்புடனான உரையாடலுக்குப் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் சரியான பாதையில் செல்வதாகவும், அமைதி ஒப்பந்தத்திற்காக உக்ரைனுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் புதின் கூறியாதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.