உலகம்

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 41 பேர் பலி

ஏவுகணை தாக்குதல் சம்பவத்தை மிருகத்தனம் என்று கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்துள்ளார்

ராம் அப்பண்ணசாமி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர்.

கடந்த பிப்ரவரி 24, 2022-ல் உக்ரைன் மீது அதிகாரப்பூர்வமாக போர் தொடுத்தது ரஷ்யா. 27 மாதங்களைத் தாண்டி நடைபெற்று வரும் போரில் உக்ரைன் மீது பல்வேறு முறைகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று (ஜூலை 8) ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த ஏவுகணை தாக்குதலில் கீவில் இருந்த ஒஹ்மடிட் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்தது. இதில் குழந்தைகள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர். ஏவுகணை தாக்குதல் குறித்த செய்தி வெளியானதும் அதை மறுத்த ரஷ்ய ராணுவம் கீவ் மருத்துவமனை மீது உக்ரைன் ஏவுகணையின் பாகங்கள் தாக்கியிருக்கலாம் என்று அறிவித்தது.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பை மறுத்துள்ள உக்ரைன் அரசு, தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் கிடைத்துள்ளதாக பதிலளித்துள்ளது. ஏவுகணை தாக்குதல் சம்பவத்தை மிருகத்தனம் என்று கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நேற்று 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர். விம்பிள்டன் தொடரில் விளையாடிவரும் உக்ரைனைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விட்டோலீனா ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்றைய போட்டியில் கருப்பு நிற ரிப்பன் அணிந்திருந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இன்று (ஜூலை 9) நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.