வங்கதேசத்தில் மக்கள் எழுச்சிக்குப் பிறகான பொதுத்தேர்தல்: கூர்ந்து கவனிக்கும் இந்தியா 
உலகம்

வங்கதேசத்தில் மக்கள் எழுச்சிக்குப் பிறகான பொதுத்தேர்தல்: கூர்ந்து கவனிக்கும் இந்தியா | Bangladesh |

வங்கதேசம் - சீனா - பாகிஸ்தான் அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டால் தெற்காசிய நாடுகள் மீதான இந்தியாவின் செல்வாக்கு குறைய வாய்ப்பு...

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்தத் தேர்தலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதற்கான முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்.

வங்கதேசத்தில் 2024-ல் நடந்த மாணவப் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று 300 இடங்களுக்கான தேர்தல், 32,789 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

கவனம் பெறும் வங்கதேச தேர்தல்

வங்கதேசத்தில் மக்கள் எழுச்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அரசியல் சூழல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில், இந்தத் தேர்தலை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் - சீனா - வங்கதேச அணி உருவாகும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டால் தேற்காசிய நாடுகளின் மீதான இந்தியாவின் செல்வாக்கு குறைய வாய்ப்பிருப்பதாக உலக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் நிகழ்ந்த மக்கள் போராட்டம்

வங்கதேசத்தில் 2024 ஜூலையில் அந்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக மாணவ அமைப்பினர் தொடங்கிய போராட்டம், காலப்போக்கில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. வன்முறை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆகஸ்ட்டில் ஷேக் ஹசீனா தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அந்த நாடு ஒரு ஜனநாயகத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்தியாவின் கவலை என்ன?

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியில் மிகவும் வலுவாக இருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் தொடர்பு ஆகியவற்றில் ஹசீனா அரசு இந்தியாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்தது. தற்போது நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, இந்தியாவின் நலன்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவாக இருக்கும் என்பது ஒரு முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

மாநிலங்களின் பாதுகாப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு, வங்கதேசத்தின் நிலைத்தன்மையுடன் நேரடியாகத் தொடர்புடையது. ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்கள் தடுக்கப்பட்டன. தற்போது அமையவுள்ள புதிய ஆட்சியிலும், இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறுபான்மையினர் நலன்

அதேபோல், 2024 எழுச்சியின்போதும் அதற்குப் பின்னரும், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது இந்தியாவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டில் அமையும் புதிய அரசு, அங்குள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமா என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.

உலக அரசியல் செல்வாக்கு

தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. வங்கதேசத்தில் ஒருவேளை இந்தியாவுக்குச் சாதகமற்ற ஒரு அரசு அமையும் பட்சத்தில், அது சீனாவின் பிடிக்குள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கைக்குப் சவாலாக அமையலாம் என்று கருதப்படுகிறது.

பொருளாதாரக் கொள்கை

வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரம், ரயில் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து எனப் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆட்சி மாற்றத்தினால் இந்தத் திட்டங்களின் வேகம் குறையுமா அல்லது கொள்கை மாற்றங்கள் ஏற்படுமா என்பது பொருளாதார ரீதியான கவலையாக உள்ளது.

வங்கதேசம் - இந்தியா உறவு

வங்கதேசத் தேர்தல் என்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும், அதன் தாக்கம் தெற்காசியா முழுவதிலும் எதிரொலிக்கும். ஜனநாயக முறைப்படி நடைபெறும் இந்தத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது விரைவில் தெரியவரும். அந்தத் தீர்ப்பு, இந்திய-வங்கதேச உறவின் அடுத்த அத்தியாயத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவேதான், எல்லை பாதுகாப்பு முதல் பிராந்திய அரசியல் வரை பல காரணங்களுக்காக புது தில்லி இந்தத் தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் கண்காணித்து வருகிறது.

A Potential Bangladesh-Pakistan-China Axis: Why India Has Its Eye On Dhaka? India's focus is on capability and intent, specifically on the new Bangladesh government cooperating on issues like border control and infiltration and maintaining the balance of power in the South Asia region.