அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிவாயு ஏற்றுமதியில் சிக்கல்: கத்தார் எரிசக்தி அமைச்சர் தகவல் 
உலகம்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிவாயு ஏற்றுமதியில் சிக்கல்: கத்தார் எரிசக்தி அமைச்சர் தகவல் | Qatar | Iran |

அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் உற்பத்தி ஆகும் 12.8 மில்லியன் டன் உற்பத்தி பாதிக்கப்படும்...

கிழக்கு நியூஸ்

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிவாயு ஏற்றுமதியில் சிக்கல் ஏற்படும் என்று கத்தாரின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கத்தார் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து உலகின் முன்னணி எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆலை, உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மையமாக உள்ளது. இதன் மீது கடந்த மார்ச் 18 அன்று ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் தாவித் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டு் ஆலை மூடப்பட்டுள்ளது.

கத்தாரில் என்ன பாதிப்பு?

இந்நிலையில் ராஸ் லஃபான் மீது நடந்த தாக்குதலால் கத்தாரின் 17% எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சருமான சாத் அல் காபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளுக்கு...

“ரம்ஜான் மாதத்தில், சகோதரத்துவ இஸ்லாமிய நாடான ஈரானிடமிருந்து கத்தார் மீது இத்தகைய தாக்குதல் நடக்கும் என்று நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. ராஸ் லஃபான் ஆலை மீது தற்போது நடந்திருக்கும் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது நீண்டகால ஒப்பந்தங்களுக்கு அவசரகால ஒப்பந்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனாவுக்கு எரிசக்தி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு, கால அவகாசம் முடியும் வரை விநியோகம் செய்யப்படும்.

எரிவாயு ஏற்றுமதி நிறுத்தம்

ஆலையில் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய வேண்டி உள்ளதால், அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் உற்பத்தி ஆகும் 12.8 மில்லியன் டன் உற்பத்தி பாதிக்கப்படும். ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருமான இழப்பு நேரும். ஐரோப்பா மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படும். உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உலக மக்கள் பலருக்கும் பாதுகாப்பான நாடாக இருந்த கத்தார் இப்போது அதிர்ந்து போயுள்ளது.

எண்ணெய் மையங்களை நெருங்காதீர்கள்

ஈரானை இஸ்ரேல் தாக்கியது என்றால் அது அந்த இரு நாடுகளுக்கு இடையிலானது. இதில் கத்தாருக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை. இஸ்ரேல், ஈரான், அமெரிக்காவுக்கு மட்டுமின்றி அனைத்து உலக நாடுகளுக்கும் சொல்வது என்னவென்றால் கச்சா எண்ணெய், எரிவாயு மையங்களை விட்டு தள்ளியே இருங்கள் என்பதே” என்றார்.

Qatar's energy minister has said that Iran's attack on the world's largest gas plant will cause problems with gas exports for the next five years.