வரலாற்றில் எந்த மனிதனையும்விட அதிகமான மானியங்களை எலான் மஸ்க் பெற்றார் என்றும், அவை மட்டும் இல்லை என்றால் அவர் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பியிருப்பார் என்றும், வரி மசோதாவை முன்வைத்து மீண்டும் மஸ்க் மேற்கொண்ட விமர்சனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், எலான் மஸ்க் தலைமையில் செலவு குறைப்பு நோக்கங்களுக்காக செயல்பட்ட அரசு செயல்திறன் துறை (DOGE), அவர் பெற்ற அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பார்க்கவேண்டும் என்றும் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
டிரம்புக்கும் மஸ்க்கிற்கும் இடையிலான மோதலின் மையத்தில், மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் நுகர்வோர் வரிச் சலுகையை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய மசோதா உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் மின்சார வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்பது டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கிற்கு கவலை அளித்துள்ளது.
இந்த மசோதாவை முன்வைத்து இருவருக்கும் இடையே தொடங்கிய மோதல் ஓரிரு வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த நிலையில், மசோதாவை மையமாக வைத்து மீண்டும் எலான் மஸ்க் விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், இதை முன்வைத்து தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள டிரம்ப்,
`அதிபர் பதவிக்கு என்னை எலான் மஸ்க் வலுவாக ஆதரிப்பதற்கு முன்பே, நான் மின்சார வாகன மானிய திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அது அபத்தமானது, மேலும் அது எப்போதும் எனது பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாகும்.
மின்சார கார்கள் என்பது பரவாயில்லை, ஆனால் எல்லோரும் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. வரலாற்றில் இதுவரை எந்த மனிதனையும்விட எலானுக்கு அதிக மானியம் கிடைத்திருக்கக்கூடும், மேலும் மானியங்கள் இல்லாவிட்டால் எலான் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார் உற்பத்தி போன்றவை இருக்காது, நம் நாடு பெரும் செல்வத்தை மிச்சப்படுத்தும். ஒரு வேளை நமது அரசு செயல்திறன் துறையை இதை நன்றாகப் பார்க்கச் சொல்ல வேண்டுமா? மிகப்பெரிய அளவிலான படம் சேமிக்கப்படவேண்டும்’ என்றார்.